ஓம் நமோ நாராயணாய
நமது அழகர் கோவில்
மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் நமது சுந்தரராஜ பெருமாள் அருள் தரும் நமது அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள அழகர் மலை “திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி” முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மற்றொரு சிறப்பு இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர் (கள்ளழகர்). மற்றொருவர் மலை மீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை (சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.
அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது. அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச் சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள்.
கோவிலுக்குள் இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார், பொதுவாக விநாயகரின் தும்பிக்கை இடது புறமாக சுழிந்திருக்கும் ஆனால் இங்கே இவரின் தும்பிக்கை வலதுபுறமாக சுழிந்திருக்கும். அதனால் இவருக்கு வலம்புரி விநாயகர் என்ற மற்றொரு பெயரும் உண்டு . இங்கு தாயார் கல்யாண சுந்தரவள்ளி தாயார். திருமணமாகாத கன்னி பெண்கள் தாயாரை வணங்கி அவரின் மஞ்சள் பிரசாதத்தை தினமும் இட்டு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது உறுதி. இங்கே சக்கரத்தாழ்வார் தன் பதினாறு கைகளில் பதினாறு ஆயுதங்களுடன் காலில் காலணி அணிந்து நடந்து செல்லும் தோரணையில் காட்சியளிக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடோடி வருவதற்கு வசதியாக காலணி அணிந்தே காத்திருக்கிறார். இங்கு யோக நரசிம்மர் அமர்ந்த யோக நிலையில் உக்கிரமாக காட்சி தருகிறார். அவரின் உக்கிரம் தணிக்க அவரின் தலைக்கு மேல் கோவிலின் மேர்புற கூரையில் ஒரு துவாரம் உள்ளது. மேலும் இங்கே ஆண்டாளின் சன்னதி, சரஸ்வதி நாச்சியார் சன்னதி, துவார பாலகர்கள் சன்னதி, விஸ்வரூப கிருஷ்ணர் சன்னதி, ஹயகிரிவர் சன்னதி உண்டு. மேலும் லெஷ்மி நாராயணன், பூமிவராஹ பெருமாள், பார்த்தசாரதி, மேட்டுகுடி கிருஷ்ணன், தாசாவதார சன்னதி, பெருமாளின் வாகனங்கள் என நிறைய உள்ளது.
இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத்தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சன்னிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர் சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.
அழகர் மலையில் ஆஞ்சநேயரின் அவதாரங்களை காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக் கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில்முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.